பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் ஒருபோதும் எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும், நாட்டில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை தடுப்பதற்கு எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரமே இதுவாகும் எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (22) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
'பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் நான் சபையில் கருத்து வெளியிட்டதாகவும், அர்ச்சுனா எம்பி அதனை அவருக்குக் கூறியதாகவும் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. குறிப்பிட்டுள்ளார். இது தவறாகும். நான் அவ்வாறு கருத்து வெளியிடவில்லை.
எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர. நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன். அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன." - எனவும் அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டார்.
அதேபோன்று 89 ஆம் ஆண்டு மரணமடைந்த பெருமளவானோர் உள்ளனர். அவர்கள் இன்றும் எமது உள்ளத்தில் நிலைத்திருக்கின்றனர்.
அவ்வாறு எங்கள் அனைவருக்கும் தலைமைத்துவம் வழங்கிய எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட நான் இதுவரை எங்கும் கூறியதில்லை. அவ்வாறான நான் வேறு ஒருவருக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா? அந்த வகையில் மேற்படி கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
எதிர்க்கட்சியினர் கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இந்தளவு அடிமட்டத்திற்கு சென்றுள்ளனர் என்பது தொடர்பில் நான் கவலையடைகின்றேன்.
இந்த நாட்டில் மரணமடைந்தவர்கள் பாரிய அளவில் உள்ளனர். அவ்வாறு மரணமடைந்த அனைவருமே எமது சகோதரர்கள். அவர்களுக்காக நான் முன் நிற்பேனே தவிர, ஒரு நபர் அல்லது ஒரு தலைவருக்காக நான் முன்னிற்க மாட்டேன்." - எனவும் அவர் குறிப்பிட்டார்.