இலங்கையில் மிக முக்கிய உள்ளுராட்சி சபைகளில் ஒன்றாகக் கருதப்படும் யாழ். மாநகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆட்சியமைத்துள்ளது.
தமிழரசுக் கட்சி உறுப்பினரான விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
யாழ். மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
யாழ். மாநகரசபையில் 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றிருந்தன.
இந்நிலையில் இன்று மேயர் பதவிக்கான தேர்வின்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மேயர் வேட்பாளராக விவேகனந்தராசா மதிவதனியும் , அகில இலங்கை தமிழ் அரசு கட்சியின் மேயர் வேட்பாளராக கனகையா ஸ்ரீ கிருஷ்ணகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வெளிப்படையான வாக்கெடுப்பில் விவேகானந்த ராஜா மதிவதனிக்கு 19 வாக்குகளும், கனகையா ஸ்ரீ கிருஷ்ணகுமாருக்கு 16 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மேயர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட விவேகானந்தராஜா மதிவதனி வெற்றி பெற்றதுடன், பிரதி மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளன் தெரிவானார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.