" செம்மணி புதைகுழி உட்பட மனித புதைகுழிகள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும்."- என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
மனித எலும்புக்கூடுகளைக் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஆய்வுகூடம் ஒன்றை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கு உதவுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரப்பட்டுள்ளது என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
"வடக்கில் செம்மணி, மண்டைத்தீவு, கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வடக்கிலும், தெற்கிலும் இவ்வாறு நூற்றுக்கணக்கான புதைகுழிகள் இருக்கக்கூடும்.
இவை தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுப்பதற்கே எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. அந்தவகையில் மனித புதைகுழிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்." - எனவும் அவர் கூறினார்.
மனித எலும்புக்கூடுகளை அடையாளம் கண்டு, ஆய்வுக்காக - உரிய வசதிகளுள்ள வெளிநாடொன்றுக்கு அவற்றை அனுப்ப வேண்டும். இதற்கு காலமெடுக்கும். மாத்தளை மனித புதைகுழியில் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை அனுப்பும்போது, எலும்புக்கூடுகள் மாற்றப்பட்டுள்ளன என்ற பலத்த சந்தேகம் எமக்கு உள்ளது.
எனவே, எமக்கு ஆய்வு செய்யக்கூடிய ஆய்வகமொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு உதவுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மனித புதைகுழிகள் தொடர்பில் நிச்சயம் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படும். எமது தோழர்கள் காணாமல்ஆக்கப்பட்டுள்ளனர்.
எனவே, புதைகுழிகளுடன் நாம் விளையாடமாட்டோம். அந்த வலி, வேதனை எமக்கு நன்கு புரியும். நீதிமன்ற நடவடிக்கை ஊடாக நீதி நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும். செம்மணி அகழ்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது." என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.