செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்படும் என்புச் சிதிலங்கள் மற்றும் சான்றுப் பொருள்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவுப் படங்கள், குற்றவியல் விசாரணைகளை சீர்குலைக்கின்றன என எச்சரிக்கப்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழியில் சமீப நாள்களாக பல்வேறு மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த இரு நாள்களாக மனிதச் சிதிலங்களுக்கு மேலதிகமாக புத்தகப்பை, வளையல்கள். பாதணிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து செயற்கை நுண்ணறிவின் உதவுடன் போலியானதும் கற்பனையானதுமான படங்களை இணையப் பயநர்கள் உருவாக்குவதுடன் அவற்றை சமூகவலைத் தளங்களில் பரவவும் விட்டுள்ளனர்.
இந்தச் செயற்பாடுகள் குற்றவியல் விசாரணைகளை சீர்குலைக்கின்றன. அத்துடன், விசாரணைகளின் நோக்கங்களில் அல்லது செல்நெறிகளில் வலிந்து தலையீட்டையும், திசைதிருப்பலையும் ஏற்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகின்றது. இதையடுத்தே, இவ்வாறான ஒளிப்படங்களைப் பகிர்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், செயற்கை நுண்ணறிவுப் படங்களால் உண்மையாகப் பாதிக்கப்பட்டவரின் உரு அடையாளங்கள் மாற்றப்படும் ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒளிப்படங்களின் உண்மையை ஆராயாமல் அவற்றை உண்மையென நம்பி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று உரையாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.