செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது செம்மணி மனித புதைகுழி தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென வினவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் ஜுன் 29 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்றது. அரசாங்க தரப்பில் இருந்து சிஐடி மற்றும் நீதி அமைச்சால் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும். தேவையான சாட்சிகள் முன்வைக்கப்படும். வழக்கு விசாரணை இடம்பெறுவதால் மேலதிக தகவல்களை வெளியிடமுடியாது." - எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.