சர்வதேச விசாரணைகளுக்கான
சாட்சியமே செம்மணிப் புதைகுழி
" ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்க்கு சாட்சியமாக செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அடையாளப்படுத்தப்படுத்த முடியும்." - என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
" எழுபது ஆண்டு காலமாகத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியோடு நிறுத்திக்கொள்ள இந்த அரசும் தன்னாலான பிரயத்தனங்களை முன்னெடுக்கக்கூடும் .
எனவே, இன அழிப்புக்கான பொறுப்புக்கூறலும் பரிகார நீதியும் பரந்துபட்ட அளவில் அணுகப்பட வேண்டும் என்பதில் நாமும், நீதியை நாடும் எல்லாத் தரப்புகளும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்." - எனவும் சிறிதரன் எம்.பி. குறிப்பிட்டார்.
உலகின் மனச்சாட்சியை உலுக்கும் உணர்வு சார்ந்த படுகொலை அடையாளமான செம்மணி மனிதப் புதைகுழியோடு, மன்னார், கொக்குத்தொடுவாய், திருக்கேதீஸ்வரம், மண்டைதீவு உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் முறையான நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில் 2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட போது, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டும், கொகல்லப்பட்டும் உள்ளதாக அப்போதைய மன்னார் மறைமாவட்ட ஆயர் மறைந்த இராஜப்பு ஜோசப் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் சர்வதேச விசாரணைகளுக்கான அடிப்படையாக செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் அணுகப்பட வேண்டும்." - என அவர் மேலும் குறிப்பிட்டார்.