2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசன்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பது தெரியவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
பிள்ளையான் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்தபோதே அவருக்கு இது குறித்து தெரிந்திருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.
குறித்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கொண்டுவந்திருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அதனை வழிமொழிந்தார்.
இவ்விவாதத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து பிள்ளையானிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டார்.
விசாரணைக்கு தடங்கல் வரும் என்பதால் அனைத்து தகவல்களையும் வெளியிட முடியாது எனவும், விசாரணைகள் உரிய வகையில் இடம்பெற்று வருகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.