யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 7 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14 ஆம் நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இன்று இடம்பெற்ற அகழ்வில் சிறுமியின் ஆடை ஒன்று உட்பட சில ஆடைகள் மற்றும் பாதணிகள் போன்ற தடயப் பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டுச் சான்றுப் பொருட்களாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதி "தடயவியல் அகழ்வாய்வுத்தளத்தின் இரண்டாவது பிரதேசமாக" நீதிமன்றத்தால் நேற்று ரகடனப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றில் அடையாளம் காணப்பட்ட என்பு எச்சங்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன. அவை நாளை அகழ்ந்தெடுக்கப்பட்டு அவை தொடர்பான எண்ணிக்கைகள் அறிக்கையிடல்கள் நாளையே வெளியிடப்படும்.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் ஆணையாளர் மிராக் ரஹீம், காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான ஞா.ரனிதா, சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.