CanadaJaffnaMain NewsSri LankaWorld

கனடாவில் கொரோனாவால் இறந்த தமிழர்கள்; மறைப்பதால் தொடரும் மர்மம்!

கனடாவிலிருந்து எதிரொலிக்காக மூர்த்தி

உலகமெங்கும் கொரோனா ஆட்கொல்லி நோய் ஆயிரக்கணக்கில் மக்களைக்காவு கொண்டுடிருக்கின்ற இவ்வேளையில், கனடாவின் நிலவரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால், அருகிலுள்ள அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவில்தான் கனடாவில் பாதித்திருக்கிறது என்று மெல்லிதாக திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

ஆனால், குடியேறிகள் அதிகமாக வசிக்கும் மாகாணங்களான பிரிட்டிஷ் கொலம்பியா (பெருநகர்: வான்கூவர்), அல்பேர்ட்டா (பெருநகர்: கல்கரி), ஒன்ராறியோ (பெருநகர்: ரொறன்ரோ), கியூபெக் (பெருநகர்: மொன்ரியால்) ஆகிய இடங்களில் கொரோனா தனது உக்கிரத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. ஏனைய மாகாணங்களும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

சுருங்கச் சொன்னால், இந்த மே மாத ஆரம்பம்வரை கனடாவின் நிலைமை கவலைக்கிடமாகத்தானிருக்கிறது.

சாவுகள் – பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, அமெரிக்கா போலவே கனடாவிலும் சில மாகாணங்கள் இம்மாதம் வியாபார நடவடிக்கைகளை மெதுவாக திறக்க ஆரம்பித்திருக்கின்றன. இதுவரை காலமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததால் பெற்றுச் சேகரித்த இலாபம் முழுவதையும், சீன இறக்குமதியான ‘கோவிட்-19’க்கு எதிராக கனடா செலவு செய்யவேண்டிய நிலைவந்துவிட்டது. நாட்டின் பொருளாதாரம் 252 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை நிலைமைக்குப் போய்விட்டது. வேலை வாய்ப்புக்கள் அதலபாதாளத்தில் விழுந்து,கனடா பொருளாதர சுருக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கனடாவின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சேர்த்து சீனா இங்குள்ள வீடுகளில் ஒரு ‘பேசுபொருள்’ ஆகிவிட்டிருக்கிறது.

இந்த கொரோனா வருவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே கனடா சீனாவுடன் பெரும் பிணக்குப்பட்டுக் கொண்டிருந்தது. 2018 டிசம்பரில் HUAWEI நிறுவன தலைமை அதிகாரியான மெங் வான்சூ கனடாவில் தடுத்து வைக்கப்பட்டது முதல், சீனா – கனடா உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டது. அந்த கைதுக்குப் பழிக்குப் பழி வாங்குவதுபோல கனடிய ராஜதந்திரிகளை சீன அரசு கைது செய்ய, இரு நாட்டினதும் உறவு கொதிநிலையில் போய் நின்றுகொண்டது. இவ்வாறான சீன எதிர்ப்பலை இருந்ததால்தானோ என்னவோ ‘கோவிட்-19’ சீனாவில் பற்றிக்கொண்ட ஆரம்ப நாட்களில் கனடிய மக்கள் அதுகுறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அதன்பின் வூஹானில் வேகமாக நோய்ப்பரவல் ஏற்பட்டது. வெளிச்சத்திற்கு வந்தபோதும்கூட “அது சீனாவின் பிரச்சனை” – என்ற நினைப்புத்தான் இங்கு பலருக்கும் இருந்தது. பிறகு, வூஹாங் நகரில் மாட்டிக்கொண்ட கனடியக் குடிமக்களை கனடிய விமானங்கள் திருப்பி எடுத்துவந்த காலகட்டத்தில்கூட மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆனால், ஆஸ்திரேலியாவில் ‘ரொய்லெட் பேப்பருக்காக நடந்த பொதுஜன மோதல்” வீடியோக்கள் சமூக வலைத்தளங்களினூடாக பரவியபோதுதான் கனடியர்கள் பலருக்கும் “ஏதோ ஒன்று பயங்கரமாக நடக்கப்போகிறது” – என்ற பயம் உருவாகத் தொடங்கியது. இருந்தாலும் ரொய்லெட் பேப்பருக்கு தட்டுப்பாடு வரமுன்னர் தாங்களும் அதை வாங்கி வைத்துவிடவேண்டும் என்ற ரீதியில்தான் ஆரம்பகால தற்காப்புச் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் –

இந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கோவிட்-19’ கனடாவிலும் வெகு வேகமாகப் பரவ ஆரம்பித்ததிலிருந்து சகலதும் மாறிவிட்டது. சாவு எண்ணிக்கை அதிகரிக்க , அதிகரிக்க மக்கள் மிரண்டுபோய் நிற்கிறார்கள். சமூக தள்ளியிருப்பு, வீடடங்கு நிலை, அவசர நிலை என பல்வேறு நடவடிக்கைகள் மத்திய – மாகாண அரசுகளால் அறிவிக்கப்பட்டன. 

வீட்டிலிருப்போருக்கு “கனடா அவசரகால கொடுப்பனவு –  Canada Emergency Response Benefit     – என்ற உதவித் திட்டம் தனி நபர்களுக்கு மாதாந்தம் 2,000 கனடிய டொலர்கள் என பண உதவியை தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு வழங்கத் தொடங்கியிருக்கிறது. 

அதைவிடவும்,சமூக தள்ளியிருப்பு காரணமாக பாதிக்கப்படும் மாணவர்கள், சிறுவர்த்தக நிறுவனங்கள், இலாபநோக்கற்ற அமைப்புக்கள் என பல்வேறு பகுதியினருக்கும் வெவ்வேறு வகையிலான நிவாரணங்கள் தரப்படுகின்றன.உதவிகளுக்காக கனடாவின் இராணுவமும் களத்தில் இறக்கப்பட்டது.

நம் தமிழ்க் கனடியர்களில் பெரும்பாலானவர்கள் ஆரம்பத்தில் கொரோனா பரவல் குறித்து – கனடா அரசாங்கம்போல் – பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. “நாங்க மிளகு ரசம் குடிக்கிறனாங்கள், தூள் சாப்பிடுறனாங்கள், கறிக்கு மஞ்சள் போடுறனாங்கள். எங்களுக்கு கொரோனா வராது” – என்றெல்லாம் சொல்லி நமது ஆண்ட பரம்பரையின் வீரக்கதைகளை எடுத்து வட்ஸ் அப்பில் ஆதாரம் காட்டிக் கொண்டிருந்தது. பிறகுதான் கதை மாறிக் கொண்டது.

இன்று கனடாவில் கொரோனா பலியெடுத்துவரும் பட்டியலில் ஈழத்தமிழ் மக்களும் அடங்குகிறார்கள். முதியோர் காப்பக இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ் முதியோரும் கணிசமான அளவில் இருக்கிறார்கள். கோவிட்-19க்கு தமிழ் மருத்துவர் ஒருவரும் பலியாகியிருக்கிறார்.

இதில் தற்போது கவனிக்கப்படும் மேலதிக சோகம் என்னவென்றால், கொரொனா வந்து தமிழர்களில் பலர் இறந்தபோதும், மாண்டவர் ‘கொரோனா வந்துதான் இறந்துபோனார்” என்பதை மற்றவர்களுக்கு வெளியே சொல்வதற்கு இறந்தவர்களின் உறவினர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இந்தப்போக்கினால்,தமிழர்களில் “கோவிட்-19”காரணமாக இறந்தவர்கள் எத்தனைபேர் என்ற புள்ளிவிவரங்களை சேகரிப்பதில் ஒரு பின்னடைவு இருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களின் கணிப்பின்படி ரொறன்ரோ பெரும்பாகத்தில் 85க்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயிருக்கிறார்கள். அவர்களைவிடவும் பல தமிழ்க் கனடியர்கள் மொன்ரியாலிலும் பலியாகிவிட்டார்கள்.

இந்த “கோவிட்-19”அவசரநிலை காரணமாக பல தமிழ் உணவு நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. ஒரிரு ‘ரேக் அவுட்’ உணவு நிலையங்கள் திறந்திருந்தாலும், அவற்றில் பலவும் தமது ஊழியரின் நலன் காரணமாக கதவை அடைத்துவிட்டன. தமிழ் பலசரக்குக் கடைகளும் கடை திறக்கும் நேரத்தை குறைத்திருக்கின்றன. சில கடைகள் மூடப்பட்டும்விட்டன. பல தமிழ்க் கடைகள் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனையில் ஈடுபட்டு தங்கள் திருகுதாளங்களை காண்பிக்கத்தொடங்கியதால்,தமிழ் சமூக ஊடகத் தாக்குதல்கள் அவற்றை நோக்கி தொடுக்கப்பட்டதென்பதும் இங்கு குறிப்பிடவேண்டிதாகிறது.

விலைப் பிரச்சனைகள் மட்டுமல்ல, ரொறன்ரோவில் பிரசுரமாகும் தமிழ்ப் பத்திரிகை ஒன்றின் குறிப்பிட்டதொரு நகருக்கான வாராந்த விநியோகஸ்தரும் அவரது மனைவியும் கொரோனா காரணமாக சாவைத் தழுவியதும் தமிழ் சமூக ஊடகங்களை அலைக்கழித்தன. குறிப்பிட்ட பத்திரிகையின் விநியோகஸ்தர் கொரோனா தொற்றுக்குள்ளானபடியால் அந்த தமிழ்ப் பத்திரிகை நிறுவனம் அது விநியோகிக்கப்பட்ட தமிழ்க்கடைகளுக்கு “கொரோனா தொற்று ஆபத்துக் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கவேண்டும்” – என்ற குற்றச்சாட்டும், கூடவே பல்வேறு ஊடக விவாதங்களும் ஒரு சுனாமிபோல எழுந்தன. ஒரு கட்டத்தில் இந்த விவாதங்கள் கொரோனா விழிப்புணர்வையும் தாண்டி, அந்த பத்திரிகைக்கும் அதன் ஆசிரியருக்கும் எதிரானவகையில் சென்ற துயரமும் நடந்தன..

இப்படியாக பலவும், கொரோனா சாவுகள் உட்பட நிகழ்ந்த அதே காலப்பகுதியில் தமிழர்கள் தமிழர்களை கொலை செய்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

Related Articles

Back to top button