" தேசிய மக்கள் சக்தியென்பதும் தெற்கிலுள்ள சிங்கள அரசுதான். எனவே, தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக இந்நாட்டில் ஒருபோதும் நீதி கிடைக்காது. சர்வதேச விசாரணை ஊடாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும்."
இவ்வாறு ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" வடக்கில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் . எனவே, செம்மணிபோல மேலும் பல புதைகுழிகள் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இருக்கலாம்." - எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.
செம்மணி புதைகுழியில் அகழ்வுப் பணி இடம்பெற்றாலும், அது தொடர்பான விடயங்களும் மக்கள் புதைக்கப்பட்டதுபோல புதைக்கப்படலாம். 4 மற்றும் 5 வயதுடைய சிறார்களின் எலும்புக்கூடுகள்கூட மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் தமிழ் மக்களை இராணுவத்தின் எப்படி கவனித்துள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும். இதற்கு எதிராக பாரிய வெகுஜன போராட்டம் அவசியம்.
தமிழ் மக்களுக்கு உள்ளக பொறிமுறை ஊடாக ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை. 2009 பெற்றோரால் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் ஆன்மீக தலைவர்களால் கையளிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது 16 வருடங்கள் கடந்தும் தெரியவில்லை.
கண்முன்னே கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியை பெற்றுக்கொடுக்க முடியாத வகையில்தான் தெற்கிலுள்ள சிங்கள அரசுகள் செயற்பட்டன. அநுரகுமாரவின் ஆட்சிகூட தெற்கிலுள்ள சிங்கள அரசுதான். எனவே, இப்படியான ஆட்சியின்கீழ் உண்மை வெளிபடாது. நீதி கிடைக்காது. எனவே, சர்வதேச ஒத்துழைப்பு ஊடாகவே நீதியை பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, சர்வதேச விசாரணையையே நாமும் வலியுறுத்துகின்றோம்." - என சிறிதுங்க ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.