செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுக்காக 11.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் தற்போது நாடு முழுவதும் 14 பாரிய புதைகுழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரழிவு மரணங்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இழப்புகளை அனுபவித்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான அரசியல் விருப்பம், தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளது.
அந்தவகையில், மனித புதைகுழி விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது.- என்றார்.
இதேவேளை, செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 18 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய, நேற்றைய தினம் 8 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரையிலும் மீட்கப்பட்ட மற்றும் அடையாளம் காணப்பட்ட மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 80 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.