" செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி விசாரணைக்கான கதவு இன்னும் திறக்கப்படவில்லை." - என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
" இலங்கையில் எங்கு தோண்டினாலும் எலும்புத் துண்டுகள்தான் வருகின்றன. சம்பூராக இருக்கலாம், திருகோணமலையாக இருக்கலாம், செம்மணியாக இருக்கலாம், கொக்குத்தொடுவாயாக இருக்கலாம், எங்கு கை வைத்தாலும் எலும்புகள்தான் வருகின்றன. மனித படுகொலைகள் நடைபெற்ற - மனித புதைகுழிகள் உள்ள நாடாக இலங்கை வருகின்றது.
செம்மணியில் 80 இற்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், இதுவரையில் நீதி விசாரணைக்கான கதவு திறக்கப்பட்டதாக தெரியவில்லை.
தேசிய மக்கள் சக்தி சகோதரத்துவம் பற்றி பேசுகின்றது. இதனை நாம் வரவேற்கின்றோம்.ஜே.வி.பி. தோழர்கள் போராளிகள்தான், 50 வருடங்களுக்கு பிறகு அவர்களை வரலாறு ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளது.
இதேபோல எமது மண்ணில் போராடியவர்கள் மாவீரர்களாக துயிலும் இல்லங்களில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர். எனினும், குறித்த துயிலும் இல்லங்களுக்கு மேல் இராணுவம் முகாம் அமைத்து, சப்பாத்து கால்களுடன் நடந்து திரிகின்றது. நிலைமை இப்படி இருக்கையில் எவ்வாறு சகோதரத்துவம் வரும்?" - எனவும் சிறிதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.