இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.
சுற்றுப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.
இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரகத்தின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அவர் நேற்று காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.
சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதேவேளை ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன்காரணமாக வைத்திய ஆலோசனையின்அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.