இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஐந்து பாதாள குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை பொலிஸார் மற்றும் இந்தோனேசிய பொலிஸார் ஆகியோர் இணைந்து முன்னெடுத்த கூட்டு நடவடிக்கையின் பிரகாரமே இவர்கள் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர். இந்திய புலனாய்வு பிரிவு மற்றும் சர்வதேச பொலிஸாரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
கெஹேல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் , பானதுற நளிந்த, தெம்பிலி லஹிரு ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தையும் பொலிஸாரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளனர்.
இலங்கை பொலிஸார், இந்தோனேசியா பொலிஸாருடன் இணைந்து கடந்த 7 நாட்களாக கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
அவர்களை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸார் இந்தோனேசியாவில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உளவு தகவல்களை திரட்டுவதற்காக யாசகர்போல்கூட நடித்துள்ளனர் என தெரியவருகின்றது.
முக்கிய பாதாள குழு உறுப்பினர்கள் வெளிநாடொன்றில் வைத்து இலங்கை பொலிஸாரால் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளமை பெரும் வரவேற்றை பெற்றுள்ளது.
மேற்படி ஐவரும் இலங்கையில் செயற்படும் மூன்று பாதாள குழுக்களை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது.
கொலை, தாக்குதல், போதைப்பொருள் வியாபாரம், அச்சுறுத்தல் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டுவந்தவர்கள்.
இவர்களில் கெஹேல்பத்தர பத்மே என்பவர் இலங்கை பொலிஸாருக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியவர்.
முழு இலங்கையையும் உலுக்கிய நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை வெளிநாட்டில் இருந்து வழி நடத்தியவர். கனேமுல்ல சஞ்ஜீவ என்ற பாதாள குழு உறுப்பினர் வழக்கு விசாரணைக்காக வந்தபோது நீதிமன்றத்துக்குள் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த ஆகியோர் இலங்கை பொலிஸாருக்கும் அவ்வப்போது அச்சுறுத்தல்களை விடுத்து வந்தனர்.
மித்தெனிய பகுதியில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி கஜ்ஜா எனப்படுபவரும் அவரது இரு குழந்தைகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் இக்கொலைகளுடன் தொடர்புபட்டவர்கள். சம்பவத்தின் பின்னரே அவர்கள் வெளிநாடுக்கு தப்பியோடி இருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கமைய அவர்களை விரைவில் இலங்கை கொண்டுவரப்படவுள்ளனர்.
அதேவேளை, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையை சேர்ந்த பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கை தொடரும் என்று பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.