நாட்டின் ஒற்றையாட்சி மற்றும் இறையாண்மையை பாதுகாத்த படையினரை சர்வதேச மட்டத்தில் காட்டிக் கொடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஊடாக இராணுவத்தினர் இலக்கு வைக்கப்படுவார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த பின்னணியில் அரசாங்கம் இரண்டு பிரதான அறிவிப்புக்களை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கு மாகாணத்துக்கு சென்று வெளியிட்ட கருத்துகள் அவதானத்துக்குரியன.
இனவாதத்துக்கு இடமில்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.வடக்குக்கு சென்றால் மாத்திரம் தான் இனவாதம் பற்றி ஜனாதிபதிக்கு நினைவுக்கு வரும்.
தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு சர்ச்சைக்குரிய தீர்மானங்களை எடுப்பதற்கும் பின்வாங்க போவதில்லை என்று ஜனாதிபதி வடக்கில் குறிப்பிட்டுள்ளார்.அந்த சர்ச்சைக்குரிய தீர்மானங்கள் என்ன வென்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
வடக்கில் இனவாதத்தை தோற்றுவிக்க தெற்கில் ஒருதரப்பினர் செயற்படுவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இந்த நாட்டில் வடக்கில் தான் இன்றும் இனவாதம் மற்றும் இனவாத முரண்பாடுகள் காணப்படுகின்றன.
ஏனைய பகுதிகளில் இனவாத செயற்பாடுகள் ஏதும் கிடையாது. வடக்கில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கு உள்ள இனவாதிகள் செயற்படும் போது அவர்கள் கைது செய்யப்படவில்லை.
வடக்கில் பௌத்த மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படும் போது அதற்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
வடக்கில் இனவாத செயற்பாடுகளுக்கும், பௌத்த மரபுரிமைகளுக்கும் எதிரான செயற்பாடுகளுக்கு இடமளித்து விட்டு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினரை பழிவாங்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.
முன்னாள் கடற்படைத்தளபதி சிறையில் உள்ளார்.
எதிர்வரும் 8 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் தான் இவ்வாறான கருத்துக்களை ஜனாதிபதி வடக்கில் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன குற்றப்பத்திர அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழுவின் ஊடாக இராணுவத்தினர் இலக்கு வைக்கப்படுவார்கள்.” – எனவும் விமல்வீரவன்ச குறிப்பிட்டார்.