யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக மாற்ற முடியாது எனப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க யாழ்ப்பாணத்தில் இறுமாப்புப் உரை நிகழ்த்தியிருக்கின்றார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமைச்சர் நேற்றுமுன்தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடத்திய விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயே இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இதன்போது மேலும் கூறுகையில்,
"யாழ். காங்கேசன்துறையில் உள்ள துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம். அத்தோடு இந்தியா இதற்கு ஒதுக்கிய பணமும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்குப் போதாது." - என்றார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
காங்கேசன்துறை துறைமுத்தின் அபிவிருத்திகள் துரிதப்படுத்தப்படுவதோடு யாழ். பலாலி விமான நிலையப் பாதுகாப்புக்காகச் சுவீகரித்து வைத்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், துறைசார் அமைச்சர் பிமல் ரத்நாயக்காவிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர்,
"யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய மாட்டோம். ஏனெனில் வணிகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்குப் பொருத்தமான காரணிகள் ஏதுவாக இல்லாத நிலையில் அம்பாந்தோட்டை மற்றும் ஒலிவில் துறைமுகங்கள் போன்று காங்கேசன்துறை துறைமுகத்தையும் மாற்ற எமது அரசு விரும்பவில்லை.
அதுமட்டுமல்லாது காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா வழங்கிய நிதி போதாது." - என்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், "இந்தியாவிடம் வேண்டுமானால் நாங்கள் பேசி மேலதிக நிதியைப் பெற்றுத் தருகின்றோம். துறைமுகத்தை அபிவிருத்தி செய்யுங்கள்." - என்று கூறியபோது, பதில் வழங்கிய அமைச்சர், "இந்தியாவிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் பேசியுள்ளார். நாங்களும் பேசியுள்ளோம். ஆனால், வணிகத் துறைமுகமாக அதை மாற்ற முடியாது." - என்றார்.
இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், "நீங்கள் எவ்வாறு ஆய்வு செய்யாமல் பொருத்தமில்லை எனக் கூற முடியும்?" - என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், "ஆய்வு அறிக்கை இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் உங்களுக்கு வழங்குகின்றேன்." - என்றார்.
"யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையப் பாதுகாப்புக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை எப்போது விடுவிப்பீர்கள்? ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு ஏன் நட்டஈடு வழங்கவில்லை?" - என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் வழங்கிய அமைச்சர், "மக்களின் காணிகள் மக்களுக்கு என்பது எமது அரசின் நிலைப்பாடு. யாழ். புலாலை விமான நிலையப் பாதுகாப்புக்காகச் சுவீகரித்த காணி விடுவிப்பு தொடர்பில் தற்போது கூற முடியாது. பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடியே பதில் வழங்க முடியும்." - என்றார்.