“ வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குரிய யோசனை , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு உட்பட முக்கிய பல விடயங்களை மையப்படுத்தியமாகவே புதிய அரசமைப்புக்குரிய பணி இடம்பெறும். இதனை நாம் நிச்சயம் செய்வோம். இதற்கு எமக்கு கால அவகாசம் அவசியம்.”
இவ்வாறு ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா அறிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ,
“ தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு உறுதிமொழிக்கும் நாம் நிச்சயம் பொறுப்புகூறுவோம்.
முதலில் தள்ளாடும் நிலையில் உள்ள பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்த வேண்டும். மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும். ஊழல், மோசடிகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவற்றை செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் கைவைத்தால் மக்கள் அதனை விரும்பமாட்டார்கள்." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன. தற்போதுள்ள அரசமைப்புக்கு பதிலாக புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் என மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய பணியின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும், புதிய தேர்தல் முறைமை உருவாக வேண்டும், அனைத்து மக்களுக்கும் உரிமைகள் கிடைக்ககூடிய வகையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தக்கூடிய யோசனைகள் இருக்க வேண்டும்,
மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவற்றை உள்ளடக்கிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்கு கால மெடுக்கும். நிபுணர்கள் மற்றும் மக்களின் கருத்துகளை உள்வாங்கி அரசமைப்பு தயாரிக்கப்படும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்படும்." எனவும் ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டார்.