பாதாள குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் பிரதான மூளையாளியாக செயற்பட்ட 26 வயதான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்காக முன்னெடுக்கப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பில் பல தகவல்கள் கசிந்துள்ளன.
கொழும்பு, அளுத்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி, வழக்கு விசாரணைக்கு வந்தபோது கணேமுல்ல சஞ்ஜீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
சட்டத்தரணிபோல வேடமிட்டுவந்த நபரொருவரே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றார். எனினும், சம்பவத்துக்கு மறுநாள் அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், பெண் சட்டத்தரணிபோல் வேடமிட்டு சட்டப்புத்தகத்துக்குள் துப்பாக்கியை மறைத்து, அதனை நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டுவந்த இஷாரா செவ்வந்தி தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் பல பகுதிகளிலும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது. அவர் சிக்கவில்லை. அவர் கடல் வழியாக வெளிநாடொன்றுக்கு தப்பிச்சென்றிருந்தார். பின்னர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சர்வதேச பொலிஸாருக்கும் இது பற்றி தெரியப்படுத்தப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கணேமுல்ல சஞ்ஜீவவைக் கொலை செய்வதற்குரிய ஒப்பந்தத்தை வெளிநாட்டில் இருந்து வழங்கிய நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள குழு உறுப்பினர்கள் சிலர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கை மற்றும் இந்தோனேசிய பொலிஸார் இணைந்தே அவர்களை மடக்கிப்பிடித்திருந்தனர்.
கெஹேல்பத்தர பத்மேவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இலங்கையின் விசேட பொலிஸ் குழுவொன்று நேபாளம் சென்றுள்ளது. அங்குள்ள பொலிஸாரின் ஒத்துழைப்பையும் பெற்று இஷாரா செவ்வந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்காக நேபாளத்தில் மூன்று நாட்கள்வரை ஒப்பரேஷன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மண்டு பகுதியில் மலைப்பகுதியொன்றில் அமைந்திருந்த வீடொன்றில் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே அவர் சிக்கியுள்ளார்.
அதேவேளை, இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பிறகு செல்வந்தி 4 நாட்கள் இலங்கையில் தலைமறைவாகி இருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.
மித்தெனிய மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளிலேயே அவர் தலைமறைவாகி இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. பின்னர் இந்தியாவுக்கு தப்பிச்சென்று அங்கு மூன்று வாரங்கள் தங்கி இரு
ந்த பின்னரே நேபாளம் சென்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு ஆண்களும், இரு பெண்களுமே நேபாளத்தில் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண் செந்தவந்தி போல் இருந்துள்ளார் எனவும், போலி கடவுச்சீட்டு ஊடாக செவ்வந்தியும், அவரும் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜே.கே. பாய் என்பவரே செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார் என தெரியவருகின்றது. இவர் நிழல் உலக தாதா கெஹேல்பத்தர பத்மேயின் சகாவெனவும் தெரியவருகின்றது.
செவ்வந்தியுடன் இணைந்து அவரும் வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார். இவர் ஊடாகவே செவ்வந்திக்குரிய பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
கைதானவர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.