சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடன் நேற்று சந்திப்பு நடத்தினார்.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையே சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீன ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையுடன் உயர்மட்ட பாதை மற்றும் அணை ஒத்துழைப்பை கூட்டாக ஊக்குவிக்கவும், துறைமுகப் பொருளாதாரம், நவீன விவசாயம், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாகவும் சீன ஜனாதபதி குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை சீனாவிற்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நேற்று முன்தினம் சீன பிரதமர் லீ கியாங்கை சந்தித்த நிலையில் நேற்று சீன ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், எல்லை தாண்டிய சூதாட்டம், மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களை உறுதியாகக் கட்டுப்படுத்தவும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்ததாக, சீனாவின் சின்{ஹவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்போது, பாதை மற்றும் அணை ஒத்துழைப்பை இலங்கை தீவிரமாக ஆதரித்து பங்கேற்பதாக கூறிய ஹரிணி அமரசூரிய, இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக சீனாவுடனான ஒத்துழைப்பை ஆழப்படுத்த விரும்புவதாகவும், குறிப்பிட்டுள்ளார்.