மலையகத்தில் நுவரெலியா மாவட்டம் - பொகவந்தலாவ, பொகவானை தோட்டத்தில் வீடொன்றில் தொட்டிலில் ஊஞ்சல் ஆடி விளையாடிக்கொண்டிருந்தார் எனக் கூறப்படும் 13 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இத்துயர் சம்பவம் நேற்று மாலைவேளையில் அரங்கேறியுள்ளது.
குறித்த சிறுமியின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்த நிலையில் உறவினரொருவரின் குழந்தைக்காக தொட்டில் கட்டப்பட்டுள்ளது. அதில் இந்த சிறுமி ஊஞ்சல் ஆடி விளையாடி கொண்டிருந்துள்ளார்.
சிறிது நேரத்துக்கு பின்பு அவர் பேச்சு மூச்சு அற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். இதனை கண்ட சகோதரன், அது பற்றி தெரிவித்து அயலவர்களை அழைத்ததையடுத்து, சிறுமியை மீட்டெடுத்த அயலவர்கள் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.
எனினும், அவரை காப்பாற்ற முடியவில்லை .
சிறுமி உயிர்ழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
பொகவந்தலாவ பொகவானை தோட்டத்தை சேர்ந்த 13 வயதான மதுமதன் ஜென்சியா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதிவான் புபூது ஜிந்தக்க தலைமையில் மரண விசாரனைகள் இடம் பெற்று , சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொட்டிலில் தொங்கி விளையாடியபோது உயிரிழப்பு நடந்ததா அல்லது வேறு ஏதேனும் நடந்துள்ளதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் தாயார் கொழும்பில் வேலை செய்வதாகவும், தந்தையின் பராமரிப்பிலேயே அவர் இருந்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.