முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
" இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் விசாரணை நடைபெற்றால் இனப்படுகொலை நிரூபிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்ற போது அதனைக் குழப்பும் விதமாக அரசுடன் இணைந்து செயற்படும் விதமாக சரத் பொன்சேகாவின் கருத்துக்களும் இருந்து வருகின்றன.
இறுதி யுத்தத்தின் போது இராணுவம் தொடர்சியாக மக்களை அழிக்கின்ற நடவடிக்கைகளின் போது கடும் ஆட்லறித் தாக்குதல்களை மக்கள் மீது பயன்படுத்தி வந்த சுழலில் தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்குக் கண்காணிக்கப்பட்ட ஒரு பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு என்னுடன் தொடர்புகளை மேற்கொண்டார்கள்.
அவ்வகையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற முயற்சிகளை மேற்கொண்டேன். குறிப்பாக 2009ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் முதல் இரவு 8 மணி வரை இருபக்கத் தொடர்புகளை மேற்கொண்டு இணக்கப்பாடு எற்படுத்தப்பட்டது.
குறிப்பாக இரண்டு ஆயர்களான இராயப்பு யோசப் ஆண்டகை மற்றும் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன் அரசு நேரடியாகத் தொடர்பு கொண்டு அரச தரப்பில் பஸில் ராஜபக்ஷவும் நானும் வன்னி கட்டுப்பாட்டுக்குக் சென்று அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசன் வெளியில் வந்து மக்களைப் பாதுகாப்பாக வெளியில் கொண்டு வருவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
ஆனால், பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்தபோதும் இராணுவம் ஆட்லறித் தாக்குதலைத் தொடர்ச்சியாக மேற்கொண்ட நிலையில் எதற்காக இதனைச் செய்கிறீர்கள் என்ற போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இல்லை, அவர் நாடு திரும்பிய பின்னர் தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துரையாடியே முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. எனினும், அந்தக் கூட்டத்தில் முடிவுகளை எடுக்கப்படாது தொடர்சியாக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது. இதனை ஏன் தொடர்ந்தும் இதனை செய்கிறீர்கள் எனக் கேட்டபோது தேசிய பாதுகாப்புக் கூட்டம் கூடும் வரை தாக்குதலை நிறுத்த முடியாது எனக் கூறப்பட்டது.
மேலும் வெள்ளைக்கொடியுடன்தான் வர முடியும் எனக் கூறப்பட்டது. இது சாத்தியப்பாடு இல்லாத விடயம் என்பதால் எனது இணக்கப்பாட்டை நான் முடிவுறுத்திக் கொண்டேன்.
காரணம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அமைப்பின் மூலம் மக்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சரி வராத நிலையில்தான் என்னுடனான தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளைக்கொடி விவகாரம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காரணம் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கம் காணப்பட்ட போதும் தொடர்ச்சியான ஆட்லறித் தாக்குதல் மேற்கொள்ளப்படுவது மக்களை இல்லாது ஒழிப்பதற்கான சூழலைத்தான் அரசு செய்தது என்பதே நான் கூறும் விடயம். இது இனப்படுகொலையின் விவகாரமாகும்.
ஆனால், சரத் பொன்சேகா தற்போது கூறி வரும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் நான் கூற முடியாது. வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களைக் கொலைசெய்தார்கள் என்பது கடந்த காலங்களில் வெளிவந்த உண்மைகள் என்பது அனைவருக்கும் புரிந்த விடயம் ஆகும்.
சரத் பொன்சேகா தற்போது கூறும் விடயம், வெள்ளைக்கொடி தொடர்பாகத் தான் சாட்சி வழங்கத் தயார் என்பதே. உள்ளக விசாரணைக்குள் வெள்ளைக்கொடி விவகாரம் முடக்கப்படுவதற்கான அத்திவாரம் போடுகின்ற கருத்தாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
சரத் பொன்சேகாவும் சர்வதேச குற்றவியல் விசாரணைதான் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்." - என்றார்.