வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது கேள்வியொன்றை எழுப்பிய எதிரணி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க எம்.பி.,
" இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக விவாதம் நடத்த நாள் கோரி இருந்தோம். எனினும், பாதீட்டு கூட்டத்தொடர் ஆரம்பமாவதால் அதற்குரிய நாளை ஒதுக்குவதில் சர்ச்சை உள்ளது. இதற்கு ஒரு நாள் வேண்டும்.
எனினும், பாதீட்டுக் கூட்டத்தொடரில் வெளிவிவகார அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தின்போதாவது மேலதிகமாக 2 மணிநேரத்தை ஜெனிவா விவாதத்துக்கு வழங்க வேண்டும்." - என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
' திகதி வழங்குவதில் பிரச்சினை இல்லை. 4 ஆம் திகதி வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் வருகின்றார். ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அன்றைய தினம் மேலும் சில நடவடிக்கைகளும் உள்ளன. நீங்கள் கூறியவாறு பாதீட்டு கூட்டத்தொடரின்போது நேரம் வழங்கலாம்.
விவாதத்துக்கு முழுநாள் வேண்டுமெனில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும்." - என்று குறிப்பிட்டார்.