வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் திட்டத்துக்கு, ஜப்பானிய அரசாங்கம் 144 மில்லியன் ரூபாய்களை கொடையாக வழங்கியுள்ளது.
அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி திட்டத்தின் கீழ் இந்த கொடை வழங்கப்படுகிறது.
இதற்கான உடன்பாடு கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது.
ஸ்கவிடா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத் திட்டம் திட்ட மேலாளர் சரத் ஜெயவர்தனவும், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டாவும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக, இந்தத் திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 144 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.
இந்தப் புதிய திட்டத்தின் கீழ், 180,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நிலம் கண்ணிவெடி இல்லாததாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சுமார் 600 பேர் மீண்டும் சொந்த நிலத்திற்குத் திரும்பவும், சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,500 பேர் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் முடியும்.
2002 முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக ஜப்பான் 48 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொடையாக வழங்கியுள்ளது.