நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவராக செயற்பட்டுவருகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச களமிறங்கியதால்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கப்பட்டது.
தோல்வி உறுதி என்பது தெரிந்தும், களமிறங்க வேண்டாம், உங்கள் அரசியல் எதிர்காலம் நாசமாகிவிடும் என நாமலிடம் பல உறுப்பினர்கள் கூறினர். அவரது குடும்ப உறுப்பினர்கள்கூட இதனை வலியுறுத்தினர். ஆனால் நெருக்கடியான சூழ்நிலையிலும் சவாலை ஏற்ற இளம் தலைவர் அவர். அதுமட்டுமல்ல நாடாளுமன்றத்திலும் துணிவுடன் செயல்பட்டுவருகின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் 2.5 சதவீத வாக்குகளே கிடைக்கப்பெற்றன. ஆனால் பொதுத்தேர்தலில் அது 10 சதவீதமாக அதிகரித்தது. நாமல் அன்று வழங்கிய உத்வேகமே இதற்கு காரணம்.
அதேவேளை, நாமல் ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூறிவருகின்றனர். அது உண்மை. அடுத்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம்.” – என்றார் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ.