அம்பலாங்கொடை நகர சபை வளாகத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள், விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளன.
வெலிகம பிரதேச சபைக்குள் புகுந்து, பிரதேச சபைத் தலைவரை துப்பாக்கி தாரிகள் சுட்டுக்கொலை செய்த சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நகர சபை வளாகத்துக்கு அருகாமையில் மீண்டும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
55 வயதான நிலந்த வருஷ விதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காரொன்றில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த காரை மற்றுமொரு பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.  
உயிரிழந்தவர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் என தெரியவருகின்றது.
அதேவேளை, உயிரிழந்தவர் நகரசபை உறுப்பினர் அல்லர் எனவும் தெரியவருகின்றது.