" நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்குமாறு தமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை." என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவ்வாறு அழைப்பு விடுத்தால்கூட அதில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்ற பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே சுமந்திரன் மேற்படி தகவலை வெளியிட்டார்.
' எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாங்கள் அதில் பங்கேற்கவும் மாட்டோம்.
இதற்கு முன்னர் பல தடவைகளிலே பல்வேறு எதிர்க்கட்சிகள் சேர்ந்து செயற்படுகின்ற போது எங்களுக்கு அழைப்புகள் விடுப்பார்கள். நாங்கள் சில வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக இணைந்து பணியாற்றுகின்றோம்.
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று சில வேலைத்திட்டங்களிலே எங்களோடு இணைந்து வருகின்றவர்களோடு சேர்ந்து பயணிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், பொதுவாக ஓர் எதிர்க்கட்சிக் கூட்டணியாக ஒன்று சேர்ந்து பயணிக்கத் தயாராக இல்லை." - என சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.