கணவன் போதைப்பொருளுடன் கைதாகியுள்ள நிலையில், அவரது மனைவியான தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகியுள்ளார்.
அநுராதபுரம், எப்பாவல பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றார் என பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதற்கமைய குறித்த அதிபருக்கு சொந்தமான எப்பாவல பகுதியிலுள்ள ஹோட்டலொன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரான அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது மகனும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பெலியகொடை பிரதேச சபை உறுப்பினரானார். பெலியகொடை பகுதியிலுள்ள அவர்களது வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.
பதவி விலகல் கடிதத்தை கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் நகல் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி முழு வீச்சுடன் செயல்பட்டுவருகின்றது. எனவே, சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதாகவும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க தேசிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலுமே அவர் பதவி விலகியுள்ளார்.