ஐக்கிய தேசியக் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் தொடர்பில் இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் உரிய வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளது.
இதற்கமைய "LEARN WITH RANIL" (ரணிலிடம் கற்போம்) ரணில் எனும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்ணான்டோ இன்று (10) தமது கடமைகளை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் பெர்ணான்டோ மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ "LEARN WITH RANIL" வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும். இளைஞர்களை அழைத்து இரு மணிநேரம் இந்நிகழ்வு நடக்கும். இதற்காக இளைஞர்கள் ஒன்லைன்மூலம் பதிவு செய்யலாம். ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்விகளை எழுப்பலாம்.
அதன்பின்னர் மாதாந்தம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை , ரணில் விக்கிரமசிங்க என்ற அனுவபம்மிக்க தலைவரிடம் அரசியல் கற்பதற்கும், அதனை ஒன்லைன்மூலமும் அவதானிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இலங்கையில் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட முதல் கட்சி என்ற நாமத்தை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி பெறும். இணையவழிமூலம் கட்சி ஆதரவாளர்கள் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க 4 சதாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்ற அரசியல் அனுபவம்மிக்கவர். 1977 முதல் 2020 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஐந்து தடவைகளுக்கு மேல் பிரதமர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.