வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள்
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகக் கைது
- நேற்றும் இருவர் வாள், கைக்குண்டு, ஹெரோயினுடன் சிக்கினர்
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் வன்முறைக் கும்பல் ஒன்றின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரும், அவரது சகாவும் நேற்று இணுவில் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது கைக்குண்டு மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேற்படி இருவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது, வன்முறைக் கும்பலின் தலைவன் என அடையாளப்படுத்தப்பட்ட நபரின் உடைமையில் இருந்து 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் அவரின் சகாவான மற்றைய இளைஞரின் உடைமையில் இருந்து கைக்குண்டு மற்றும் வாள் என்பவற்றைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், இருவரையும் தொடர்ந்து 72 மணி நேரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியைக் கோர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் , தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு யாழ்ப்பாணம் வர உதவிய குற்றச்சாட்டில் யாழில் இயங்கும் வன்முறைக் கும்பல் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவரது சகோதரன் நேற்று 2 ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்து மாவா பாக்குடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்
அத்துடன், வத்தளையில் கார் ஒன்றில் கைதுப்பாக்கியுடன் பயணித்த போது கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுக்கும் யாழில் இயங்கும் வன்முறைக் கும்பல்களும் இடையில் தொடர்பு உள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.