பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுஆய்வு செய்து ரத்துச் செய்வதற்கான பரிந்துரைக்களை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழு, தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் சமர்ப்பித்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன தலைமையிலான இந்தக் குழு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்து, பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை முன்மொழியும் பணியை மேற்கொண்டது.
விரிவான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சீர்திருத்த செயல்முறையை உறுதி செய்வதற்காக, சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதும் இதன் பணிகளில் அடங்கியிருந்தது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான எதிர்கால கட்டமைப்பை வடிவமைப்பதில் பரந்த ஆலோசனையின் அவசியத்தை வலியுறுத்தி, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு ஏப்ரல் 13 ஆம் திகதி இந்தக் குழுவை அமைத்திருந்தது.