தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரிகின்றது.
இந்த விடயம் குறித்து பேசுவதற்காக நேரம் ஒதுக்கி தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே இன்னொரு முக்கிய விடயத்துக்கான சந்திப்புக்காக புதன் அல்லது வியாழக்கிழமை நண்பகல் நேரத்தை வழங்கி இருக்கின்றார். அந்தச் சந்திப்பு நடக்கும் நாளுக்கு மற்றைய தினத்தில் இந்தச் சந்திப்பு நடக்கும் என்று ஜனாதிபதியின் செயலக அதிகாரிகள் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரோடு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருக்கின்றார்கள் என அறியவருகின்றது.
புதன்கிழமையா, வியாழக்கிழமையா சந்திப்பது என்பதை இன்று அல்லது நாளை ஜனாதிபதி செயலகம் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளுக்கு உறுதிப்படுத்தும் எனத் தெரிகின்றது.
தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளரோடு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றுவர் எனத் தெரிகின்றது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றிய பேச்சுக்கள் என்பதால் அது குறித்து மட்டுமே இந்த உரையாடலில் கலந்துரையாடப்படும் என்றும், தீர்வுக்காக முன்னகரும் அதேநேரம், அதற்கிடையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், அதுவரையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் ஆகியவை குறித்தும் தமிழரசுக் கட்சி இந்தச் சந்திப்பில் வலியுறுத்தும் எனத் தெரிகின்றது.