பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பிறந்தநாளன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொடூர சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் யாழ். வடமராட்சி - கரணவாயில் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த இராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்பவரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
"கொல்லப்பட்ட இளைஞரின் கைபேசிக்கு நள்ளிரவு 12 மணியளவில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். வீதியில் அவரைத்
பின் தொடர்ந்தனர் என்று நம்பப்படும் இருவர் அவரை வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
வெளியே சென்ற மகனைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிச் சென்றபோது அவர் வீதியில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டார். அவரை மீட்ட பெற்றோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, கொலையாளிகளுக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே போராட்டம் இடம்பெற்றுள்ளது என்றும், இதன்போது, கொலையாளி என்று நம்பப்படுபவர் அணிந்திருந்த ரீசேர்ட்டின் கை பகுதி கிழிந்து கொல்லப்பட்டவரின் கையில் இருந்தது என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கொலையான இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் பின்தொடர்வதும் சி.சி.ரி.வி. கமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது.
இதேசமயம், கொல்லப்பட்ட இளைஞர் பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தார் என்றும் ,அங்கு பெண் ஒருவரைப் பதிவுத் திருமணம் செய்திருந்தார் என்றும், அவர் பிரான்ஸுக்கு மீண்டும் செல்லவிருந்த நிலையிலேயே கொலை இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.