தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் பைசல், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சபாநாயகரிடம் முறையிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பியே இது தொடர்பில் அர்ச்சுனா முறையிட்டார்.
“ சபாநாயகரே, புத்தளம் மாவட்ட வைத்தியசாலை தொடர்பில் இன்று காலை சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன்.
எனது கேள்விகள் முடிவடைந்த பின்னர் சிற்றுண்டிச்சாலைக்கு சென்றேன். அங்கு வைத்து புத்தளம் மாவட்ட எம்.பி. பைசல் என்னை கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்தார். கமரா இருந்தது. அதில் இது பதிவாகி இருக்கும். எனவே, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” எனவும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டார்.
“ எனக்கு சாவதற்கு பயணம் இல்லை. ஆனால் மிரட்டல்களுக்கு அடிபணிய முடியாது.” எனவும் அவர் கூறினார்.
எனினும், அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டை தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் நிராகரித்தார்.
“ மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நான் நாடாளுமன்றம் வந்துள்ளேன். அந்தவகையில் புத்தளம் வைத்தியசாலையை தரம் உயர்த்தி தருமாறு ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். இதனை செய்து தருவதாக அமைச்சரும், ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, பெயர் பலகை வைக்குமாறு நாம் கோரியதாக கூறும் விடயம் தவறு. உறுப்பினர் (அர்ச்சுனா) இங்கு பொய் சொல்கின்றார். எவரையும் நாம் பயமுறுத்தவில்லை. உயர்ந்த சபையை தவறாக வழிநடத்த கூடாது. நபர்களை தனிப்பட்ட ரீதியில்தாக்க முற்படக்கூடாது.” எனவும் சைபல் எம்.பி. குறிப்பிட்டார்.