இயற்கை அனர்த்தம் காரணமாக வடக்கு மாகாணத்தில் மிக அதிக பாதிப்பை எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 12 கால் நடைகள் உயிரிழந்துள்ளன என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உறுதி செய்துள்ளது.
40 வருட வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் ஒட்டுமொத்த மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இதேபோன்று மாவட்டத்தின் பொருளாதாரமாக விளங்கும் விவசாயம், கால்நடை ஆகிய இரு துறைகளும் அழிவடைந்துள்ளன.
இதில் 16 ஆயிரத்து 386 மாடுகளும், 9 ஆயிரத்து 628 ஆடுகளும் என மொத்தம் 26 ஆயிரத்து 12 கால்நடைகள் அழிவடைந்துள்ளமையை மாவட்ட அனர்த்த முகாத்துவப் பிரிவு உறுதி செய்துள்ளது.
இந்தக் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 31 ஆயிரத்து 264 கோழிகளும் வெள்ளத்தில் அகப்பட்டு அள்ளுண்டும், உயிரிழந்தும் உள்ளன எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த கால்நடைகள், கோழிகள் என்பனவற்றுடன் அவற்றின் தங்குமிடங்கள், பண்ணைகள் மட்டுமன்றி அவற்றுக்கான தீவனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டமையால் மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிக பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.