இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச யாழ்ப்பாணம் வருவதில் என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பதை சத்தியக் கடதாசி மூலம் தெரியப்படுத்துமாறு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இருவரும் 2011 இல் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவை, இந்த வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்தது.
எனினும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாவதற்கு பாதுகாப்பு பிரச்சினை உள்ளதாக கூறி கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் முன்னிலையாவதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில், அவர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தனது சட்டவாளர் மூலம் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ள கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் மின்னணு முறையில் சாட்சியமளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் எந்தவொரு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் ஆதாரங்களை முன்வைக்க அவர் தவறியுள்ளார் என, சட்டவாளர் புபுது ஜயகொட, அவரது கோரிக்கையை சவாலுக்கு உட்படுத்தினார்.
இந்தநிலையில் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான ஆதாரங்களை 2026 பெப்ரவரி 6ஆம் திகதி நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியாக முன்வைக்க வேண்டும் என யாழ்ப்பாணம் நீதிவான் உத்தரவிட்டார்.
அச்சுறுத்தல்கள் குறித்த உறுதியான ஆதாரங்கள் இருந்தால் கோட்டாபய ராஜபக்சவை மின்னணு முறையில் சாட்சியமளிக்க அனுமதிக்கலாமா அல்லது ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றால் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையா உத்தரவிடலாமா என்பது தொடர்பில் அன்றைய தினம் நீதிமன்றம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.