தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் நடத்திய பேச்சுக்களில், அரச தரப்பு பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்த ராஜன் ஆசீர்வாதம் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1994-95 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுடன் சந்திரிகா அரசாங்கம் போர் நிறுத்த உடன்பாடு செய்து கொண்டு பேச்சுக்களை நடத்தியிருந்தது.
அந்தப் பேச்சுக்களுக்காக சந்திரிகா அரசினால் நியமிக்கப்பட்ட குழுவில் அப்போது இலங்கை வங்கியின் தலைவராக இருந்த ராஜன் ஆசீர்வாதம், லயனல் பெர்னான்டோ, பாலபத்தபெண்டி, நவீன் குணரத்ன உள்ளிட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் சார்பில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தலைமையில், கரிகாலன், டொமினிக், இளம்பரிதி ஆகியோர் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.
சந்திரிகா அரசாங்கம் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களை பேச்சுக்கு அனுப்பாமல், அரச அதிகாரிகளை பேச்சுக்கு அனுப்பியது விடுதலைப் புலிகளுக்கு அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் அளித்தது.
இந்தப் பேச்சுக்கள், 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி முறிந்து, மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது.
சந்திரிகா அரசின் பேச்சுக் குழுவில் இடம்பெற்றிருந்த ராஜன் ஆசீர்வாதம் முதுமையினால் கொழும்பில் மரணமடைந்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் கொழும்பில் நடைபெறுகிறது.
பட்டயக் கணக்காளரான ராஜன் ஆசீர்வாதம், இலங்கை வங்கி, மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் தலைமைப் பதவிகளை வகித்துள்ளதுடன், தனியார் நிறுவனங்களிலும் தலைமைத்துவம் வகித்திருந்தார்.