அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீளாய்வு செய்யும் நூல் ஒன்றை முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எழுதி வெளியிட்டுள்ளார்.
‘இலங்கை அமைதி செயல்முறைகள்: ஒரு உள் பார்வை’ என்ற தலைப்பில், வெளியிடப்பட்டுள்ள இந்த நூல், 2002 செப்டம்பர் 16,இல் தாய்லாந்தின் சத்தஹிப்பில் தொடங்கிய இடம்பெற்ற அமைதிப் பேச்சுக்கள் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்தப் பேச்சுக்களின் கட்டமைப்பு பலவீனங்கள், போட்டி நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் இறுதியில் அதன் சரிவுக்கு வழிவகுத்த அரசியல் காரணிகள் குறித்தும் இதில் விபரிக்கப்பட்டுள்ளது.
சமாதான முன்னெடுப்பின் வடிவமைப்பு, அதன் பலம் மற்றும் உள்ளார்ந்த குறைபாடுகள், அடையப்பட்ட வரையறுக்கப்பட்ட ஆதாயங்கள் மற்றும் அதன் தோல்வியைத் தூண்டிய காரணிகளை இந்த நூல் பகுப்பாய்வு செய்கிறது.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில், பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜி.எல்.பீரிசின் பார்வையில் இந்த சமாதான முயற்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை இது விளக்குகிறது.
பேச்சுக்களில் சம்பந்தப்பட்ட ஆளுமைகள், இரு தரப்பிலும் உள்ள மூலோபாய கணக்கீடுகள் மற்றும் கடுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்துவதன் யதார்த்தங்கள் பற்றிய அவர் தனது நேரடி அனுபவங்களை இதில் விபரித்துள்ளார்.
சமகால உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் ஆயுத மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் போராடி வரும் நிலையில், அமைதி செயல்முறைகளின் சாத்தியங்கள் மற்றும் பலவீனம் மற்றும் தவறான நடவடிக்கைகளினால் கொடுக்கப்படும் அதிக விலை ஆகியவற்றை ‘சிறிலங்கா அமைதி செயல்முறைகள்: ஒரு உள் பார்வை’ நூல் நினைவூட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.