இலங்கையில் அவசரகால நிலையை நீடிப்புச் செய்வதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) பிரிவு 2 இன் கீழ், வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவதுது பிரிவின் விதிகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 6 ஆம் நாள், நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் ஏற்கனவே நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 6 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது ஒப்புதலுக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு விதிகளின் கீழ், ஜனாதிபதி ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அவசரகால நிலையை அறிவிக்க முடியும்.
அதனை நீடிப்புச் செய்வதற்கான பிரகடனம் வெளியிடப்பட்டு, ஒரு வாரத்திற்குள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவசரகால சட்டம் அது தானாகவே காலாவதியாகி விடும்.
அண்மைய இயற்கை பேரிடரை அடுத்து, ஜனாதிபதி நவம்பர் 28 ஆம் நாள், அவசரநிலையை பிரகடனம் செய்திருந்தார்.