“தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடவில்லை. சாராயமும், கொத்து ரொட்டியும் பெறுவதற்காகவே சிலர் அங்கு சென்று போராடுகின்றனர். இது தொடர்பில் சிங்கள மக்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ தையிட்டி விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி உடைக்க வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த பிரச்சாரத்தை முன்னெடுக்கும் தரப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் விகாரைக்கு எதிராக போராடவில்லை. அரசியல் பின்புலம் உள்ளவர்களே போராட செல்கின்றனர். சாராயத்துக்கும், கொத்து ரொட்டிக்காகவும் செல்லும் கூட்டமொன்றும் உள்ளது. ஏனைய சமூகங்களிலும் இப்படியான கூட்டம் உள்ளது.
சில தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகளை வைத்துக்கொண்டு சிங்கள மக்கள், தமிழர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்ககூடாது. சிங்கள மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு இல்லை. அவர்கள் விகாரையை உடைக்க முற்படவும் இல்லை.
ஜனவரி 03 ஆம் திகதி விகாரை உடைக்கப்படும் என முகநூல் நேரலையில்கூட குறிப்பிடுகின்றனர். இப்படியானவர்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை இல்லை எனவும் அர்ச்சுனா எம்.பி. குறிப்பிட்டார்.
அதேவேளை, புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்புவதாக இருந்தால் அதனை நான் தான் செய்வேன். சொல்லிவிட்டுதான் நான் அதை செய்வேன். எவருக்கும் அச்சம் ஏற்படாத வகையிலேயே அதனை நான் செய்வேன்.
சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்களே இப்படி செயல்படுகின்றனர். “ – என அவர் மேலும் கூறினார்.