இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் தனது பதவிகாலத்தை நிறைவுசெய்துகொண்டு எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பிலிருந்து அமெரிக்க தூதுவர் தாயகம் திரும்புகின்றார்.
இந்நிலையிலேயே பாதுகாப்பு செயலாளரை அவர் நேற்று பிரியாவிடை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, பாதுகாப்புச் செயலாளரும் அமெரிக்கத் தூதுவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மற்றும் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடினர்
.
மேலும் பிராந்திய பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் பரஸ்பர விடயங்களில் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடினர்.
டித்வா சூறாவளியின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் தூதரின் சிறப்பான பங்களிப்பிற்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டுத் தெரிவித்தார்.
இச்சந்திப்பு அமெரிக்காவுடன் நெருக்கமான மற்றும் ஆக்கபூர்வமான உறவுகளைப் பேணுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்தது.
அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுசும் இதில் பங்கேற்றிருந்தார்.