விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (09) முற்படுத்தப்பட்டவேளை 20 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் ஒன்று வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது.
பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது.
எனவே, குறித்த துப்பாக்கி எவ்வாறு பாதாளகுழு வசம் சென்றது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கொலை விசாரணைப் பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
டக்ளஸ் தேவானந்த தரப்பில் உரிய பதில் வழங்கப்படாததால் அவர் கைது செய்யப்பட்டார். இரு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.