ஈழப் போர்க்காலத்தில் களமுனைச் செய்திகளை விவரணங்களாக எழுதிய சிரேஷ்ட ஊடகர் இக்பால் அத்தாஸ் காலமானார்.
பாதுகாப்புத்துறை மற்றும் அரசியல் செய்திகளை வழங்கும் விற்பன்னராக திகழ்ந்த அத்தாஸ், சர்வதேச ரீதியான ஊடகங்களினதும் இலங்கை செய்தியாளராக செயற்பட்டார். அரசியல் உள்ளக செய்திகளையும் அவர் பத்திரிகையில் எழுதுவார்.
சிங்கள படைத்தரப்பில் அவருக்கு இருந்த தொடர்புகள் நினைத்தும் பார்க்க முடியாதவை. தேசிய பாதுகாப்புச் சபை முதல் உயர்மட்ட பாதுகாப்பு கூட்டங்களில் நடக்கும் விடயங்கள் அவருக்கு அடுத்த மணிநேரமே கிடைத்துவிடும். தகவல் வழங்குநர்கள் எவரையும் அவர் வெளியில் எப்போதுமே காட்டிக்கொடுத்ததில்லை. அதனால்தான் அவருக்கு பாதுகாப்பு செய்தியாளராக நீடிக்க முடிந்தது.
நகைச்சுவை உணர்வு கொண்ட அவர் அரசியல்வாதிகள் பலரின் செயற்பாடுகளை , ஊடகத்துறை செய்தி சேகரிப்பு நிகழ்வுகளை நகைச்சுவையாக கூறுவார்.கேட்கவே ரசனையாக இருக்கும்..
ஒரு நாள் முக்கியமான செய்தியொன்றை எடுக்க அவர் முக்கியமான படைத்தளபதி ஒருவரை சந்திக்க வேண்டியிருந்தது. அவரை பொதுவெளியில் சந்திக்க முடியாது. ஆனாலும் சந்திக்கவும் வேண்டும். எனவே மே தின கூட்டமொன்றில் கலந்துகொள்ளும் ஆதரவாளர்கள் போல பேரணியொன்றில் கோஷங்களை எழுப்பியவாறு இருவரும் ஷேர்ட் சரத்துடன் சென்றதாகவும் அந்த இடைவெளிக்குள் வேண்டிய தகவல்களை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் ஒருநாள் அத்தாஸ் கூறினார்.செய்திகளை எடுக்க வேண்டுமென நினைத்தால் எப்படியும் எடுத்துவிடுவார்.பிற்காலத்தில் அவர் அரசியல் பத்தியை எழுதிவந்தார்.
பல்வேறு அச்சுறுத்தல்கள் அவருக்கு வந்தன. ஆனால் அவர் சளைக்கவில்லை.