ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தைப்பொங்கல் தினத்தன்று வடக்குக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ். வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நாளை பிற்பகல் 2 மணிக்கு வட மாகாண தைப்பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பார்.
அத்துடன், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் விழாவிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2,500 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.
இந்நிகழ்வு நாளை மறுதினம் 16 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு யாழ்ப்பாணம், சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெறும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.