"எந்த மொழியைப் பேசினாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம்." என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், வேலணை, ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று (15) பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, பல கலை கலாசார நிகழ்வுகளினால் இவ்விழா வர்ணமயமாக அமைந்தது.
தைப்பொங்கல் கொண்டாட்டமானது அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் ஏற்படுத்தும் ஒரு சந்தர்ப்பம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தற்போதுள்ள நிலையை விட அனைத்து வகையிலும் முன்னேற்றமடைந்த, வளமான நாட்டை உருவாக்கி பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு திடஉறுதியுடன் முன்வருமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
தைப்பொங்கல் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,
தமிழ் மக்களின் முக்கியமானதொரு கலாசார தினமாக தைப்பொங்கல் தினத்தில் நீங்கள் உற்சவத்தை கொண்டாடும் நிலையில் எனக்கும் உங்களுடன் இணைவதற்கு வாய்ப்புக் கிடைத்தமையை பாக்கியமாக கருதுகிறேன். அதே போன்று இந்து மக்களின் கலாசாரத்திற்கு அமைய இன்று தான் புத்தாண்டு பிறக்கிறது.
புத்தாண்டு பிறப்பதோடு புதிய பிரார்த்தனைகள், எதிர்பார்ப்புகள் உருவாகிறது. குறிப்பாக மக்கள் என்றவகையில் உங்களுக்கு பாரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதேபோன்று நாடென்ற வகையில் எமக்கு புதிய எதிர்பார்ப்புகள் உள்ளன.
தற்பொழுது இருப்பதை விட சகல வகையிலும் வளமான செழிப்பான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். நாம் வளமான நாடு என்று எதனைக் குறிப்பிடுகிறோம்.
பணம் மற்றும் கட்டுமானங்களின் ஊடாக வளம் பெற்ற நாட்டையா அவ்வாறு சொல்கிறோம். அதனை விட அதிகளவான துறைகளில் வளமான நாட்டை உருவாக்க வேண்டும். நாம் ஆட்சியை ஏற்று ஒரு வருடத்தை விட சற்று அதிக காலம் சென்றுள்ளது.
வரலாற்றில் மிகக் குறைவான இனவாத மோதல்கள் நடந்த இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த தேசிய ஒற்றுமைக்காக போராடிய வருடம் இது.
ஏனைய காலங்களில் பல்வேறு இடங்களில் இனவாத மோதல்கள் மற்றும் இனவாத போக்குகள் இடம்பெற்றன. இனவாதமற்ற தேசிய ஒற்றுமை நிறைந்த வளமான நாடே எமக்குத் தேவை.
எங்கு பிறந்தாலும் எந்த மொழி பேசினாலும் எந்த மதத்தை பின்பற்றினாலும் எத்தகைய கலாசாரச் சூழலில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் எமது நாட்டில் கௌரவமான பிரஜையாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே எமது அபிலாசையாகும்.
இனவாதமற்று வளமான நாடே எமக்குத் தேவை. எம்மிடையே வேறுபட்ட கலாசாரங்கள் இருக்கின்றன. ஒரு நாடு எவ்வாறு அழகாகும்? மக்கள் மத்தியில் எவ்வாறு நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்?
இந்த அனைத்து கலாசாரங்களினதும் கௌரவம், மதிப்பு மற்றும் அங்கீகாரம் என்பன மிக முக்கியமானது. நாம் அத்தகைய நாட்டை உருவாக்க வேண்டும். அது தான் எமது எதிர்பார்ப்பாக உள்ளது.
பொருளாதார ரீதியில் பெரும் அழுதத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இருப்பதை விட சிறந்த வாழ்க்கை நிலையை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக சிறந்த வீட்டை வழங்குவது சிறந்த கல்வியை வழங்குவது ஆரோக்கியமான வாழ்விற்காக சிறந்த சுகாதார சேவையை ஸ்தாபிப்பது விவசாயம் ,மீன்பிடித்துறை என்பவற்றை முன்னேற்றி சிறந்த வருமான வழியை அமைத்துக் கொடுப்பது இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது போன்றவை அரசாங்கம் என்ற வகையில் எமக்குள்ள எதிர்பார்ப்புகளாகும்.
இங்கிருக்கும் அநேகமானோர் கடந்த பொதுத் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்து யாழ் மாவட்டத்தை முதன்முறையாக வெற்றி கொள்ள பங்களித்தவர்களாகும். நீங்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நீங்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை சிறிதளவாவது வீழ்ச்சியடைய இடமளிக்காது இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவோம்.
உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் மகிழ்ச்சியோடும் நிம்மதியோடும் வாழும் நாட்டை நாம் உருவாக்குவோம். இங்கு திரண்டுள்ள மக்களின் பிரதான எதிர்பார்ப்பு அதுதான் என்பதை நாம் அறிவோம்.
மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக நாம் தயக்கமின்றி எமது பொறுப்பை நிறைவேற்றுவோம். இந்த தைப்பொங்கல் தினத்தில் ஒரு பிரார்த்தனை செய்வோம்.
நாம் பிரியாதிருப்போம். நாம் ஒன்றுபடுவோம். சிறந்த நாட்டை எமது மக்களுக்காக உருவாக்குவோம். அனைவரும் திடஉறுதியுடன் முன்வர வேண்டுமென பிரார்த்திக்கிறேன்'' என்றும் தெரிவித்தார்.