2011 ஆம் ஆண்டு கிவுல் ஓயாத் திட்டம் தயாரித்ததிலிருந்து இன்று வரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன.
இந்தப் போக்கு ஏன் என்று கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சீற்றத்துடன் கேள்வி எழுப்பினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.
இந்தக் கூட்டத்தில் பங்குபற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனும் இந்தத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு விசேட செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.
"கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று நாடாளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைசார் அமைச்சின் பிரதி அமைச்சர்கள், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மகாவலி - எல் வலய விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வாறான ஒருகூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் ஒருசில தினங்களுக்கு முன் பிறிதொரு நிகழ்வில் தெரிவித்த அமைச்சர் கே.டி.லால்காந்த அதற்கான அழைப்பு எங்களுக்கு அனுப்பப்படும் என அப்போது தெரிவித்தார்.
அமைச்சர் லால்காந்த இதன்போது எமது கருத்தை அறிய ஆவலாக உள்ளார் எனத் தெரிவித்தார்.
மகாவலி - எல் வலய குடியேற்றம் தொடர்பான விடயங்களிலும் அங்கு இப்போது நடைபெறும் கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலும் கசப்பான கடந்தகால அனுபவங்களும் கரிசனையும் எமக்கு உள்ளன என்பதை அச்சபைக்கு தெரியப்படுத்தினோம்.
2011ஆம் ஆண்டு கிவுல் ஓயாத் திட்டம் தயாரித்ததிலிருந்து இன்றுவரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுவதாக சபைக்கு சுட்டிக்காட்டினோம்.
இவ்வாறே செட்டிகுளத்தில் நடைபெறும் கீழ்மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டம் இரகசியமாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்குத் தெரியாமல், அத்திட்டத்துக்கான காரியாலயத்தை இரகசியமாக அனுராதபுரத்தில் அமைத்து வேலைகளை முன்னெடுத்தமை தொடர்பிலும் தெரியப்படுத்தினோம்." - எனவும் சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான திட்ட முன்மொழிவை எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து பொருத்தமான அனுமதியை பெறவேண்டும் என்று நான் முன்மொழிந்திருந்தேன். அவ்வாறு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினேன்.
மகாவலி - எல் வலய அபிவிருத்தி என்ற பெயரில் அங்கிருந்த பூர்வீக குடிமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு 1983இல் குடியேற்றம் செய்யப்பட்டாலும் இதுவரை மகாவலி நீர் அங்கு கொண்டுவரப்படவில்லை. கிவுல் ஓயாத் திட்ட முன்மொழிவில் மகாவலி நீரை கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் இல்லாததாலேயே மாற்றீடாக இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாக இருப்பதையும் மேற்படி திட்ட நோக்கத்தில் புதிதாக அபிவிருத்தி செய்யும் இடத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டதையும் தெளிவுபடுத்துமாறு கோரினோம்.
எமது கருத்தைக் கேட்டறிந்த அமைச்சர் உட்பட்ட குழுவினர் பின்வரும் உறுதிமொழிகளை எமக்கு வழங்கினர்:-
* திட்டப் பிரதேசத்துடன் தொடர்புடைய அனைத்து மக்கள் பிரதிநிகளுடனும் பிரதேச மக்களுடனும் பெப்ரவரி மாத முற்பகுதியில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நடைபெறும்.
* புதிய குடியேற்றவாசிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படமாட்டர்கள்.
சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாது திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்தும் தறுவாயில் எமது தலையீட்டையடுத்து தெளிவுபடுத்தல் செய்ய ஆயத்தமாகும் செயற்பாடு ஆபத்தானது, கண்டிக்கப்பட வேண்டியது.
மேற்படி திட்டத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டில் அனைவரும் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைவரையும் இந்தச் செயற்பாட்டில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகின்றேன்." - என்று சத்தியலிங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் ,
"தமிழ் மக்களுக்குப் பல்வறேு வழிகளிலும் பாதகமாக இருக்கின்ற கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டுகின்ற வகையிலும், திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது.
இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதகத் தன்மைகள் தொடர்பில் எடுத்துக்கூறி நானும், வைத்தியர் சத்தியலிங்கமும் இந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தோம்.
இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர்களது இனப்பரம்பல் கோலம் மற்றியமைக்கப்படுவதுடன், தமிழர்களது பூர்வீகத் தொல்லியல் சான்றுகளும் அழிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினோம்.
இது தவிர சுற்றுச்சூழல் பாதிப்பு நிலைகள் ஏற்படும் அபாய நிலைகள் இருப்பதையும் இதன்போது மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம் - என்று குறிப்பிட்டார்.