மேற்குலகம் தன்னை பாதுகாத்து வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லும் என புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கடைசிநொடிவரை நம்பிக்கொண்டிருந்தார் என கொக்கரித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தேசியவாத முகாமை இல்லாதொழிப்பதற்கான சூழ்ச்சி தேசிய மற்றும் சர்வதேச சக்திகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. புலிகள் அமைப்புக்கு மஹிந்த ராஜபக்சதான் முடிவு கட்டினார். ஆனால் தலிபான்களை ஒழித்துக்கட்ட முடியாமல் நேட்டோ அமைப்பு இன்னமும் திணறுகின்றது.
1987 வடமராட்சி சமர் இன்னும் மூன்று நாட்களுக்கு நீடித்திருந்தால் அன்றே பிரபாகரனை பிடித்து, புலிகளை ஒழித்திருக்கலாம். ஆனால் இந்தியா வந்து பருப்புபோட்டு, ஜனாதிபதியை மிரட்டி அன்று போரை நிறுத்தியது.
2009 இல் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய தருவாயிலும் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர்.
மேற்குலகம் வந்து விமானத்தில் தன்னை அழைத்துச் செல்லும் என பிரபாகரன் இறுதிகட்டம்வரை நம்பினார். மஹிந்த ராஜபக்ச சர்வதேசத்தின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால்தான் மஹிந்தவை சர்வதேசம் பகைத்துக்கொண்டுள்ளது. ஜெனிவாவிலும் தீர்மானங்கள் வரத்தொடங்கின. போலியாக போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன” – என்றார்.