ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நிராகரித்துள்ளது.
மேற்படி பிரேரணையுடன் உடன்படி முடியாது எனவும், இது தொடர்பான நிலைப்பாடு மாநாட்டில் நாளை எடுத்துரைக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது ஜெனிவா கூட்டத்தொடர் சம்பந்தமாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தினார். இதன்போது அவர் கூறியவை வருமாறு,
“ 51/1 பிரேரணைக்கு நாம் இணக்கம் தெரிவிக்க முடியாது.
நாட்டில் புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய தேர்தல் நடைபெறவுள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் மேற்படி பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பல விடயங்கள், புதிய அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தில் உள்ளன. அவற்றை அமுல்படுத்துவதற்கு புதிய அரசாங்கமொன்றை அமைக்கவேண்டியுள்ளது.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்குரிய புதிய நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் செல்லவுள்ளது. இதற்கு கால அவகாசம் வேண்டும். இது தொடர்பில் பேரவையில் நாளை தெளிவுப்படுத்தப்படும்.” – என்றார்.