"தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம்."
- இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"தமிழ் மக்கள் கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று (நேற்று) தாக்கல் செய்துள்ளது. இளைஞர்களைக் களமிறக்கி இளைஞர் அணியை எமது கட்சி நிறுத்தியுளது.
நான் ஏற்கனவே கூறியது போன்று கூட்டணியில் இளைஞர்களுக்கு மிக முக்கியத்துவம் அளித்து தேர்தலில் இருந்தும் ஒதுங்கிக்கொண்டுள்ளேன்.
இந்தக் கட்சியின் முக்கியமான கொள்கைகளளாக தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறை இருக்கின்றது. இந்த இலக்கு அடையும் வகையில் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம்.
அநுரகுமார அரசு புதிய அரசமைப்பைத் தயாரிக்கவுள்ளதாம். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும்போது வடக்கு, கிழக்கில் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்தனர். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கின்றது என்பதை அநுரகுமார அரசு உண்மையில் ஏற்றுக்கொண்டால் அரசுடன் சேர்ந்து முன்செல்லத் தயாராக இருக்கின்றோம்.
தமிழரசுக் கட்சி முன்னர் இருந்த பலரும் தற்போது அந்தக் கட்சிக்குள் இப்போது நடைபெறும் சம்பவங்கள் காரணமாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் பலர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மனவருத்தத்தில் உள்ளனர். இதனால் ஒரு சிலர் வெவ்வேறு கட்சிகளுடன் இணைந்துள்ளனர்.
குறிப்பாக தேசிய மக்கள் சக்தியினர் அதிகளவான இளைஞர்களை உள்ளீர்த்தமை போன்று நாமும் இளைஞர்களை உள்ளீர்த்துப் பலமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
இந்தத் தேர்தலில் மற்றக் கட்சிகளை நாங்கள் விமர்சனம் செய்யாமல் நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதையே கூறி எமது பிரசாரங்களை முன்னெடுப்போம்." - என்றார்.