இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்குரிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இலங்கை அரசியல் வரலாற்றில் இம்முறை பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இலங்கை அரசியல் களத்தில் கடந்த பல தசாப்த காலங்களாக அரசியல் ஜாம்பவான்களாக வலம்வந்த சிலர் நாடாளுமன்ற அரசியலுக்கு விடைகொடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்கே , மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராபக்ச ஆகியோர் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளனர்.
சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் தேர்தலில் களமிறங்கவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 1970ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார்.1977ஆம் ஆண்டு தவிர அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் எம்பியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
ராஜபக்ச வம்சத்தின் வாரிசான நாமல்கூட தேசியப் பட்டியல் ஊடாகவே நாடாளுமன்றம் வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
இலங்கையின் முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியைக் கையாளக் கூடிய இயலாமை காரணமாக கோத்தபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவிக்கு மூன்று ஆண்டுகளுக்குள் வெளியேற்றிய 2022 தெரு ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ராஜபக்ச அரசியல் முடிவடைந்தது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிக்கையின்படி 22 மாவட்டங்களுக்காக 690 வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை 74 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
64 வெவ்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடும் கிழக்கு திகாமடுல்ல மாவட்டத்திற்கு அதிக வேட்பு மனுக்கள் வந்துள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார்.
தென்மேற்கு மொனராகலை மாவட்டம் மற்றும் வடமத்திய பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான வேட்புமனுக்கள், தலா 15 பட்டியல்கள் வந்துள்ளதாக ரத்நாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் அடிப்படையில் 22 மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களும், 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை ஐந்தாண்டு காலத்திற்கு வழங்குவதற்காக 29 பேர் தேசிய பட்டியலிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சபா.தயாபரன்