நாடு சமஷ்டி கட்டமைப்புக்கு மாறுவதை தடுக்க வேண்டுமெனில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைப்பது தடுக்கப்பட வேண்டும். அதற்காகவே நாம் போட்டியிடுகின்றோம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 2015 நல்லாட்சி காலத்தில்போது தயாரிக்கப்பட்ட அரசமைப்பு இறுதிப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி கூறியுள்ளார். எமது நாடு மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அப்படியானால் அரசமைப்பின் 9 ஆவது சரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, இதனை செய்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவர்களுக்கு கிடைப்பதை தடுக்க வேண்டும்.
இரண்டாவது பெடரல் இராஜ்ஜியம். 9 மாகாணங்களுக்கும் சுயாதீன அதிகாரங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் அதில் உள்ளன. அதனையும் தடுக்க வேண்டும்.
எமது நாட்டில் பொலிஸ், காணி அதிகாரங்களை பகிர்ந்து நாட்டை சமஷ்டியாக்குவதற்கு எந்த ஜனாதிபதியும் இடமளிக்கவில்லை. அதனை ஜனாதிபதி அநுர செய்ய முற்பட்டால் அதனையும் தடுக்க வேண்டும். அதேபோல ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்துக்குரிய முன்னுரிமையில் கைவைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.” – என்றார்.